நாளை அமைச்சர்கள் இருவரும் முதல்வரிடம் இராஜினாமா கடிதங்களை வழங்குவர்?

நாளை(14) வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தன்னிலை விளக்கம் வழங்க உள்ளனர். அதன்பின் முறைப்படி தங்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே அமைச்சர் குருகுலராஜா அவர்கள் இராஜினாமா செய்யப்போவதாக கட்சித்தலைமைக்கு அறிவித்திருக்கின்ற போதிலும் முறையான இராஜினாமா கடித்த்தினை முதலமைச்சரிடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இராஜினாமா கடிதங்களை முதல்வர் ஏற்றுக்கொள்வாரா அல்லது மறுப்பாரா அல்லது ஏற்றுக்கொண்டு அமைச்சரவையினை முழுமையாக கலைத்து விட்டு புதிய அமைச்சரவையினை அமைப்பதற்கு உறுப்பினர்களிடம் வேண்டுகோள் முன்  வைப்பாரா என்பது எதிர்பார்ப்புகளுக்குட்பட்டுள்ளது. ஏற்கனவே  அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் உறுப்பினர்களிடம் தொலைபேசி வழி கருத்துக்கணிப்பு செய்து கொண்டிருக்கின்றார்.

நாளைய அமர்வில் அமைச்சர்களின் தன்னிலை விளக்கங்களை அடுத்து நடைபெறும் விவாதங்களைத்தொடர்ந்தே முதலமைச்சர் தனது முடிவினை அறிவிப்பார்

தான் அமைத்த அமைச்சரவை மீதான கூட்டுப்பொறுப்பின்காரணமாக அமைச்சரவையினை கலைத்து விட்டு புதிய அமைச்சர்களுக்கான சிபார்சினை உறுப்பினர்களிடையே விட்டு இனிவரும்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளிற்குரிய பொறுப்பை உறுப்பினர்களிடம் விட்டு விடும் திட்டம் ஒன்று முதல்வரிடம் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. அவ்வாறு நடைபெறுமானால் அமைச்சரவை தெரிவுகள் இழுபறியில் நீடிக்கும் என நம்பப்படுகின்றது

இதேவேளை ஏதாவது சச்சரவுகள் முரண்பாடுகள் ஏற்பட்டு வடக்கு மாகாணசபை சிக்கலுக்குள் தவிக்குமானால் தமக்கு நெருக்கடி ஏற்படுத்தம் இந்த சபையினை கலைத்து விடுவதற்கான சந்தர்ப்பம் தங்களுக்கு வாய்க்கும் என தெற்கு அரசியல் தலைமை காத்திருப்பதாகவும் அதற்கான காய்நகர்த்தல்களில் அது ஈடுபட்டிருப்பதனை அரசின் அமைச்சர்கள் சிலரின் கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

தவறும் பட்சத்தில் தமது ஆட்சிக்கு கட்டுப்பட்டு செயற்படக்கூடிய மென்வலுப்போக்கினை வடக்கு மாகாணசபை தனது இறுதிக்காலமான 1 வருடத்திற்கு கொண்டிருப்பதை உறுதிசெய்ய அரசு விரும்புவதாகவும் தெரிய வருகின்றது.

Related Posts