நாய்களைத் தெருவில் விட்டால் 2 வருட சிறைத்தண்டனை!

நாய்களை பொது இடங்களிலும் தெருக்களிலும் விட்டுச்செல்லும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இதற்கமைய, நாய்களைத் தெருக்களில் விடுபவர்களுக்கு எதிராக, 1901ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது.

இதன்படி நாயொன்றினைத் தெருவில் விட்டுச் செல்லும் குற்றவாளிக்கு 25,000 ரூபாவுக்கு அதிகமாகாத குற்றப் பணம் அல்லது 2 வருட சிறைத்தண்டனை வழங்குவதற்கு அல்லது இரண்டு தண்டனைகளையும் வழங்குவதற்கு ஏதுவான முறையில் 1901-ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இதனை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சரவை, குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலான சட்ட வரைபை மேற்கொள்வதற்கு வழக்கறிஞர்களின் ஆலோசனையைப் பெற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அனுமதியளித்துள்ளது.

இலங்கையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts