நாம் குற்றவாளிகள் அல்லர்; உண்மை ஒரு நாள் வெல்லும்!

“நாங்கள் குற்றவாளிகள் அல்லர். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.”- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தெஹிவளை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாமல் எம்.பி., பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.) நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

முற்பகல் 10.30 மணிக்கு வருகைதந்த அவரிடம் சுமார் மூன்றரை மணிநேரம் பலகோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“எம்மை சிறையில் அடைப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இதில் காட்டும் தீவிரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு காட்டினால் நன்றாக இருக்கும்.

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு அரசிடம் திட்டம் எதுவும் இல்லை. எமது ஆட்சியில் அது முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர்கள் நிவாரணங்களை மாத்திரம் வழங்காது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்களை வகுக்கவேண்டும்.

அதேவேளை, தெஹிவளை பகுதியிலுள்ளது பாட்டியின் இடம். அம்மாவும் அங்குதான் வாழ்ந்தார். இதைப்பற்றிதான் இன்று தேடுகின்றன. இதற்கு மேல் நான் எதையாவது கூறினால், நானும் தற்போதுள்ள அமைச்சரவைப் பேச்சாளர்போல் ஆகிவிடுவேன். ஆகவே, நாங்கள் குற்றவாளிகள் அல்லர். உண்மை ஒரு நாள் வெல்லும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.

Related Posts