நாமலுக்கு 45 கோடி ரூபாவை தரகாக வழங்கியது இந்திய நிறுவனம்!

கொழும்பில் அமைக்கப்படவிருந்த கிரிஷ் சதுக்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்காக 45 கோடி ரூபாவை தரகுப் பணமாக நாமல் ராஜபக்‌ஷ பெற்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை நிதி மோசடி தடுப்புப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கொண்ட கிரிஷ் சதுக்கம் ஒன்றை அமைக்க இந்திய நிறுவனமான கிரிஷ் குறூப் நிறுவனம் 8 ஆயிரத்து 450 கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை செய்தது.

இந்தத் திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்காக அந்த நிறுவனம் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 45 கோடி ரூபாவை தரகுப் பணமாகப் பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. இதற்காக அந்த நிறுவனம் சிங்கப்பூர் எச்.எஸ்.பி.சி. வங்கியின் நாமல் ராஜபக்‌ஷவின் கணக்கில் அந்தப் பணத்தை டொலர்களில் வைப்பிலிட்டுள்ளது.

பணம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி ஒன்று கிரிஷ் சதுக்கம் அமைக்க வழங்கப்பட்டுள்ளது. இதில் மேலும் 3 அரசியல்வாதிகளும் சில வர்த்தகர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

எனினும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் கிரிஷ் நிறுவனத்துக்கும் இடையில் பணக் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் அந்தத் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டதுடன் நிறுவனத்துக்கு 55 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நாமல் ராஜபக்‌ஷ தரகுப் பணத்தில் 40 கோடி ரூபாவை அந்நிறுவனத்துக்கு திரும்ப வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாகவே இப்போது நிதி மோசடி தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிகிறது.

Related Posts