நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மதுரையில் நிருபர்கள் சந்திப்பின்போது நடிகர் வடிவேலு பேட்டி அளித்தார். அப்போது அவர், தான் நடித்த ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணோம் என்று நகைச்சுவை செய்ததுபோல, பேட்டியின் போது நடிகர் சங்கத்தை காணோம் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ராஜா, நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனாம்பாள் நடிகர் வடிவேலுவை நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வடிவேலு வெளியூர் சென்று இருப்பதால் நாமக்கல் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வக்கீல்களான நக்கீரன், வக்கீல் ராமசாமி ஆகியோர் நேற்று ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அய்யாவு, முத்துக்குமரன், குணசேகரன், தங்கமுருகன் ஆகியோர் வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனாம்பாள் வருகிற 27-ந் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.