நான் ரசிகர்களை விரும்புகிறேன், ஆனால் செல்ஃபி எடுப்பது பிடிக்காது : விக்ரம்

தமிழ்த் திரையுலகத்தின் வித்தியாசமான நடிகர் எனப் பெயரெடுத்துள்ளவர் விக்ரம். படத்திற்குப் படம் விதவிதமான கதாபாத்திரங்களிலும், சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்பின் மீதான தன்னுடைய வெறியை அளவுக்கதிகமாகவே வெளிப்படுத்தி வருகிறார்.

vikram

‘ஐ’ திரைப்படத்திற்காக அவர் உழைத்த உழைப்பிற்கு தேசிய விருத தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கோபப்படும் அளவிற்கு விக்ரம் அவருடைய நடிப்பைப் பற்றி பேச வைப்பவர்.

அடுத்து விரைவில் வெளிவர உள்ள ‘இருமுகன்’ படத்தில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மீண்டும் ரசிகர்களை ஈர்க்கத் தயாராக இருக்கிறார்.தன்னைப் பற்றியும் தனது நடிப்பைப் பற்றியும் அவர் அளித்துள்ள மினி பேட்டி….

“என்னை விட நடிப்பின் மீது என் அப்பாவுக்கு பேஷன் அதிகம். அவருடைய கனவை நிறைவேற்றுவதற்காக அவர் வீட்டை விட்டு ஓடி வந்தார். என்னை விட அவர்தான் சிறந்த நடிகர் என எப்போதும் என்னுடன் விவாதம் செய்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் அவருடைய கனவையும், தோற்றத்தையும் அவர்தான் எனக்களித்ததாகக் கூறுவார்.

சினிமாவின் ஒவ்வொரு துறையையும் நான் நேசிக்கிறேன். டப்பிங் பேசிய போது நான் கற்றுக் கொண்டதுதான் எனக்கு ‘அந்நியன் மற்றும் ஐ’ படங்களில் உதவி செய்தது. என்னைப் பொறுத்தவரையில் நடிப்பு என்பது 40 சதவீதம், டப்பிங் என்பது 60 சதவீதம். நான் பலருக்கும் டப்பிங் பேசியிருக்கிறேன். தமிழில் பிரபுதேவா, அப்பாஸ், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோருக்கும் கூட டப்பிங் பேசியிருக்கிறேன். நான் ஓரளவிற்கு புகழ் பெற்ற பிறகும் கூட அப்பாஸுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன், அதற்குக் காரணம் எனக்கு டப்பிங் பேசுவது மிகவும் பிடிக்கும். சினிமாவைப் பொறுத்தவரையில் எதிலும் நான் பணியாற்ற விரும்புகிறேன்.

சினிமாவும், வாழ்க்கையும் வெவ்வேறு என்பது எனது எண்ணம். என்னுடைய குடும்பத்தினர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். என்னுடைய மனைவி இப்போதும் ஆட்டோவில் போகிறார், என்னுடைய மகனும், மகளும் பேருந்திலும் பயணம் செய்வார்கள். வீட்டில் நாயைக் குளிப்பாட்டுவது, காரைக் கழுவுவது என என்னுடைய வேலைகளை நானே செய்வேன்.

திருமணத்திற்கு முன்பு என் மனைவியிடம் ‘சினிமாதான் எனக்கு முதலில் அதற்குப் பிறகுதான் நீ எனச் சொன்னேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய மனைவியிடம் பாரு, இந்தப் படம் ஹிட் ஆகிடும் என சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால், பல வருடங்கள் கழித்தே நான் செட்டில் ஆனேன். இப்போதும் அவர் என்னை படங்கள் ஓடக் கூடாது என பிரார்த்திக்கச் சொல்வார், அப்போதுதான் நான் சினிமாவை விட்டு வேறு எங்காவது செட்டில் ஆவேன் என்பார்.

‘இருமுகன்’ படத்தின் கதையை இயக்குனர் ஆனந்த் சங்கர் என்னிடம் சொன்னார்.

நான்தான் ஹீரோ என்பது தெரியும், இருந்தாலும் ஒரு தெலுங்கு நடிகரையோ அல்லது ஹிந்தி நடிகரையோ தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவர் நினைத்திருந்தார். ஆனால், அந்தக் கதாபாத்திரம் வலிமைய வாய்ந்த ஒன்று, அதனால் அதை நானே செய்கிறேன் என்று சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்தார்.

‘பீமா’ படத்திற்காக நான் 3 வருடங்கள் வீட்டில் இருந்தேன். தயாரிப்பு சம்பந்தமாக பல பிரச்சனைகள் இருந்தன. ஒரு நாள் படப்பிடிப்பு இருக்கும். அடுத்த 20 நாட்களுக்கு படப்பிடிப்பு இருக்காது. இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்காக இடைவிடாமல் ஜிம்முக்கு சென்று கொண்டிருப்பேன். படப்பிடிப்பு, வீடு, ஜிம் இதுதான் என்னுடைய வாழ்க்கை, நான் எப்போதும் பார்ட்டிகளுக்கு செல்வதில்லை.மக்கள் என்னை ஸ்டார் என்கிறார்கள், ஆனால் நான் ஸ்டார் அல்ல. நான் புதிய சகாப்தம் படைக்க விரும்பும் ஒரு நடிகர். பழிக்குப் பழி வாங்குவது என்பதுதான் வெற்றிக்கான தத்துவம்.

நான் ரசிகர்களை விரும்புகிறேன், ஆனால் செல்ஃபி எடுப்பது பிடிக்காது. நம்மிடம் பேசுவதை விட்டுவிட்டு செல்ஃபி எடுக்க விரும்புவது எனக்குப் பிடிப்பதில்லை. இப்போதெல்லாம் யாராவது என்னிடம் ஆட்டோகிராப் கேட்டால் எமோஷனல் ஆகிவிடுகிறேன். யாராவது அவர்களுடைய குப்பைப் பக்கங்களை நிரப்பச் சொன்னால் நிரப்பிவிடுவேன்,” என்கிறார்.

Related Posts