நான் புலிகளுக்கு எதிரானவன் அல்ல : ஆனந்தசங்கரி

Anantha-sankareeஇந்தியாவுடன் குரங்குச் சேட்டை விடமுடியாது என்று பல அமைச்சர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன். அவர்கள் வெறும் 20 கட்டைக்கு அப்பால் தான் இருக்கின்றார்கள் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. தேர்தல் வேண்டாம், காணி, பொலிஸ் அதிகாரங்கள் இரத்து செய் என்ற கத்தியவர்கள் இன்று வாய் மூடி அமைதியாக இருக்கின்றார்கள் என்றால் பலத்த அடிவிழுந்திருக்கு என்று அர்த்தம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கேள்வி : விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் மீண்டும் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் உங்களது அரசியல் நிலைப்பாடு என்ன?

பதில் : என்னைப் பற்றிய கருத்தெல்லாம் விசமத்தனமானது. சில ஊடகங்கள் என்னைப் பற்றி தப்பான பிரச்சாரம் செய்துவருகின்றனர். நான் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவன் இல்லை. ஆனாலும், அவர்களின் சில செயற்பாடுகள் தொடர்பில் திருத்துவதற்காக கண்டிப்புக்களையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன். பாராளுமன்றத்தில் 13 தடவைகள் புலிகளுக்கு சார்பு நிலையான கருத்துக்களை பேசியிருக்கின்றேன். ஆனாலும் எவரும் அறிக்கை கூட விடவில்லை. முன்னர் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கின்றனர். நான் தேர்தலில் போட்டியிடுவது பதவி ஆசைக்காக அல்ல மாறாக என்மேல் உள்ள தப்பான கருத்துக்களை மாற்றி என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக கிளிநொச்சியில் போட்டியிடுகின்றேன். அத்துடன் எனது வெற்றி மூலம் எமது மக்களுக்கு சேவை செய்ய எதிர்பார்த்திருக்கின்றேன்.

கேள்வி : கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : 2001 இல் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தியவன் நான் தான். அதன் தலைவராகவும் செயற்பட்டிருக்கின்றேன். 1972 இல் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில் கூட்டமைப்பு பதியப்படுவதன் மூலம் எல்லோரும் ஒர் கட்சியாக ஒன்றிணைந்து செயற்பட முடியும்.

கேள்வி : கூட்டமைப்பின் பொது முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் மக்கள் மற்றும் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : இலங்கை சட்டக் கல்லூரியில் அவருடன் ஒன்றாக படித்திருக்கின்றேன். மிகவும் நேர்மையானவர். மக்களும் அவர் மீது நல்ல அபிப்பிராயத்தில் உள்ளனர். அவரை அரசாங்கம், புலி என்று பேசிய போது அதற்கு எதிராக கண்டித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். உண்மையில் அரசியல் என்பது அவருக்கு பழக்கமில்லாத தொழில் என்பதால் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும்.

கேள்வி : நீங்கள் தொடர்ந்தும் அரசாங்கம் கொடுத்த வீட்டில் தான் வசித்து வருவதாகச் சொல்லப்படுகின்றது. உண்மையா?

பதில் : எனக்கு உலகத்திலே சொந்த வீடு இல்லை. அது பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட வீடு. முதல் சந்திரிக்கா சம்பந்தனுக்கு கொடுத்திருந்தார். அதே வீட்டை ரணில் எனக்கு தந்திருந்தார். அதற்கு மாதம் 6000 வாடகை கட்டி வருகின்றேன். உண்மையில் இந்த வீடு மிகவும் பழமையானது. நல்ல வீடு கிடைத்தால் மாறிவிடுவேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்க வீட்டில் இருந்து கொண்டு என்னைத் தான் குற்றம் சாட்டுகின்றனர். இவை எல்லாம் விசமத்தனமான கருத்துக்கள் என்ற தான் கூறுவேன்.

கேள்வி : இறுதியாக 2001 பொதுத் தேர்தல் மற்றும் 2009 யாழ் மாநகர சபைத் தேர்தல்களைத் தவிர ஏனைய எந்த தேர்தல்களிலும் நீங்கள் வெற்றி பெறாதமைக்கான காரணம் என்ன?

பதில் : அந்த காலத்தில் என்னுடைய எல்லாவிதமான உண்மைகளையும் மறைத்து நான் விடுதலைப்புலிகளை அழிக்க முற்பட்டவன் என்ற பொய்யான பிரச்சாரம் செய்தனர். நான் யாழ். மாநகரசபைக்கு போட்டியிட்ட போது பதவி ஆசை கொண்டவன் என்று பிரச்சாரம் செய்தனர். ரவிராஜ், கந்தையா உட்பட பலரது வளர்ச்சிக்கு நான் உதவியிருக்கின்றேன். ஒரு முறை ஜனாதிபதி என்னை அழைத்து வட மாகாகண ஆளுனராக பதவி ஏற்கும் படி கேட்டிருந்த போது அது எவ்வாறு எமது பிரச்சினையைத் தீர்க்கும் என்று கேட்டு அதனை நிராகரித்திருந்தேன். சில விடங்களை கையாள்வதற்கு பதவி முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது எனவே போட்டியிட்டேன்.

கேள்வி : விடுதலைப்புலிகள் உங்களை நிராகரிக்க காரணம் என்ன?

பதில் : எனக்குத் தெரியாது. அவர்களுக்கு என்னைப் பற்றி தப்பான முறையில் ஓதுதல் நடந்திருக்கின்றது என்று தான் கூறமுடியும். 2001இல், நாங்கள் பிரபாகரனைச் சந்தித்த போது அவர் என்னுடன் அன்பாக பேசியிருந்தார். பிரபாகரன் என்னை வெறுக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் என்னை ஆதரித்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

கேள்வி : கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படத் தொடங்கியுள்ள நிலையில் இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள்?

பதில் : பிரதான கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. அவர்கள் தான் முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். இவை தொடர்பில் என்னால் சுயேட்சையாக செயற்பட முடியாது. பாரதூரமாக அச்சுறுத்தல் இடம்பெற்றால் கண்டிப்பேன். கிளிநொச்சியில் இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை. இத்தகைய நிலை தேர்தல் முடியும் வரை தொடரத்தான் போகிறது.

கேள்வி : 13 வது திருத்தத்தை இலங்கை ஒழிக்க முற்பட்டால் இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்?

பதில் : இந்தியாவுடன் குரங்குச் சேட்டை விடமுடியாது என்று பல அமைச்சர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன். அவர்கள் வெறும் 20 கட்டைக்கு அப்பால் தான் இருக்கின்றார்கள். அவர்களை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது. 13 திருத்தத்தை இந்தியா திணிக்கவில்லை. தமிழரது தீர்வாக முன்மொழியப்பட்டது. நான் நினைக்கவில்லை இந்தியாவுடன் இலங்கை முரண்படும் என்று. தேர்தல் வேண்டாம், காணி, பொலிஸ் அதிகாரங்கள் இரத்து செய் என்ற கத்தியவர்கள் இன்று வாய் மூடி அமைதியாக இருக்கின்றார்கள் என்றால் பலத்த அடிவிழுந்திருக்கு என்று அர்த்தம். இந்திய மாநில ஆட்சி மாதிரியானது. ஆகவே இது தொடர்பில் இந்தியா கவனமாகச் செயற்படும்.

கேள்வி : காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் உங்களது நடவடிக்கை என்ன?

பதில் : பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியிருக்கின்றோம். எமது சக்திக்கு ஏற்ப இதனைத் தான் எம்மால் செய்ய முடிகின்றது. இதற்கு மேலையும் செய்யமுடியும் என்று சொன்னால் அதனையும் செய்ய நாம் தயார்.

கேள்வி : வன்னியில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எத்தகைய திட்டங்களை செய்து வருகின்றீர்கள்?

பதில் : கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்படுகின்றனர். இவர்களுக்கு உடனடித் தீர்வு அவசியம். பலர் கை கால் இழந்து ஊனங்களாக மற்றவர்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பெற்றோரிடம். பெற்றோர் இறந்த பின்னர் அவர்களுக்கு யார் ஆறுதல் எனவே அவர்களை பராமரிப்பதற்கு பொதுவான விடுதி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும். விதவைகளுக்கு எனது உற்றார் உறவினர்கள் கொடுக்கும் சிறிய தொகையைக் கொண்டு அவர்கள் கடை வைப்பதற்கும் கோழி வளர்ப்பதற்கும் உதவி செய்துவருகின்றேன். இத்தகைய கதையை ராஜமகேந்திரனிடம் கூறிய போத அவர் உடனடியாக 200000 ரூபா கொடுத்து உதவி செய்யும் படி சொல்லியிருந்தார். எனது சக்திக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றேன்.

கேள்வி : புலம்பெயர் தமிழரின் அரசியல் செயற்பாடுகளைக் கொண்டு தாயகத்தமிழரின் பிரச்சினையை எவ்வாறு கையாள முடியும்?

பதில் : ஒரு கவலை எனக்கு உண்டு. இவர்கள் பல மாநாடுகளை எற்பாடு செய்திருந்த போதும் என்னை எதற்கும் அழைக்கவில்லை. அவர்களுக்கு என்ற ஒரு கடமையுள்ளது. இங்குள்ள நிலவரத்தின் ஏற்ப மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். அவர்கள் புலி ஆதரவாகச் செயற்படும் போது இங்குள்ள தமிழ்மக்களை அரசாங்கம் தமிழ் மக்களை மேலும் பிரச்சனைக்குள்ளாக்கும். இன்று மொரட்டுவ, பாணந்துறை வரைக்கும் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் நாடு பிரிவு என்பதும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கேள்வி : புலம்பெயர் உறவுகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் : எமக்கு இப்போது அபிவிருத்தி வேண்டாம். மக்களின் பசியைப் போக்க வேலைத் திட்டங்கள் அவசியம். தாயக உறவுகளின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய உதவிகளை புலம்பெயர் உறவுகள் வழங்க வேண்டும். அதனை நேர்மையானவர்கள் ஊடாக பாதிக்கபட்ட மக்களுக்கு கிடைக்கும் படி செய்ய வேண்டும். வெறுமனே தமது குறுகிய இலாபத்திற்காக ஒரு சில அரசியல்வாதிகளுடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு தேவைக்கு அதிகமாக வழங்குவது நல்லதல்ல. ஆகவே உதவிகள் பரந்துபட்டளவில் மக்களை சென்றடைய புலம்பெயர் உறவுகள் உதவி செய்ய வேண்டும்.

நன்றி : பா.டனிசியன்

Related Posts