நான் துரோகி என்றால் இலங்கை கிரிக்கட் சபை அதைவிடத் துரோகி!

அவுஸ்திரேலியப் பந்துவீச்சு அணிக்கு ஆலோசகராக இருக்கும் என்னைத் துரோகி என்றால் இலங்கையிலுள்ள சிறந்த வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்புக்கொடுக்காத இலங்கை கிரிக்கட் சபை அதைவிடப் பெரிய துரோகி என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலிய அணிக்கு போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பே நான் ஆலோசகராகக் கடைமையாற்றுகின்றேன். அவர்கள் என்னை முழுநேரமாகக் கடமையாற்றக் கேட்டனர். அதற்கு நான் மறுப்புத் தெரிவித்துள்ளேன். இலங்கை அணி விளையாடும்போது நான் எவ்வாறு அவர்களது உடைமாற்றும் அறையிலிருந்து விளையாட்டை ரசிப்பது. நான் நாட்டில் அளப்பரிய பற்று வைத்துள்ளேன்.

நாட்டுக்காக நான் பலவற்றைச் செய்துள்ளேன். ஆனால் இன்று என்னை துரோகி என அழைக்கின்றனர். ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். நான் துரோகி இல்லை. இலங்கை கிரிக்கட் சபைதான் துரோகி.

2011ஆம் ஆண்டு மட்டுமே இலங்கை அணிக்கு என்னை ஆலோசகராக இருக்கும்படி கேட்டனர். அந்த நேரம் என்னால் முழுமையான ஆலோசகராக இருக்கமுடியாதெனவும் நேரம் இருக்கும்போது செய்கிறேன் எனவும் தெரிவித்தேன்.

இப்போது அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக இருக்கும்போது குற்றம் சுமத்துகின்றனர். அது பிழையான செயற்பாடாகும்.

அவுஸ்திரேலிய அணிக்கு முன்னர் என்னை இலங்கை அணி கேட்டிருந்தால் நிச்சயம் நான் என் நாட்டு அணிக்காகவே செய்திருப்பேன். அதனைக் கிரிக்கட் சபை தரவில்லை.

நாட்டில் சிறந்த பல கிரிக்கட் வீரர்கள் இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரவழைத்து பயிற்சி கொடுக்கின்றனர்.

நான் நாட்டை நேசிக்கின்றேன், நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts