நான் தியாகியா என்று தெரியாது. ஆனால் துரோகியில்லை என்று கத்தி இசை வெளியீட்டு விழாவில், காரசாரமாக பேசியுள்ளார் நடிகர் விஜய்.
கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்ப்பு மற்றும் கடும் கெடுபிடிகளுக்கிடையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பவர்களைப் போலவே காட்சி அளிக்க, விஜய் மட்டும் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்தார்.
விழாவில் அவர் பேசியதாவது, ‘உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது இன்னும் தெளிவாக விளங்கும். ஆனால் வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மையாகிடும். படம் எடுக்கிறதுங்கிறது சண்டை போடுறதுக்கல்ல. சண்டை சச்சரவுகளை மறந்து பார்த்து ரசிக்கிறதுக்கு தான்.
நான் தியாகியா என்று தெரியாது. ஆனா தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகியல்ல. எந்த ஒரு மக்களுக்கும் ஆதரவாகவோ, இல்லை எதிராகவோ இந்தப் படத்தை எடுக்கவில்லை. அது மட்டும் நிச்சயம்.
ஒரு படத்தில் ஒரு வசனம் உண்டு, ‘ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருக்கும் பிறகு போக போக அதுவே பழகிவிடும்’ என்று விஜய் கூறியுள்ளார். இந்த விழாவில் கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நேரடியாக எதையும் பேசவில்லை விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியுள்ளது ஜெயா டிவி. ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி வந்தது.
கத்தி 65 தமிழ் அமைப்புகள் முதலில் இந்தப் படத்தை எதிர்த்தன. சில தினங்களில் அது 150 அமைப்புகளாக மாறியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நண்பரின் நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை எக்காரணம் கொண்டும் வெளியாக விடமாட்டோம் என வரிந்து கட்டினர்.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டை சென்னையில் நடத்துவதாக அறிவித்தனர் லைகா நிறுவனத்தினர். இதை எதிர்த்து பெரும் போராட்டத்தை தமிழ் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் அறிவித்திருந்தன.
இப்போது படத்தையே ஜெயா டிவி வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல,இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் உரிமையும் ஜெயா தொலைக்காட்சியே பெற்றது.
கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என பொலிஸில் முறைப்பாடுகள், நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசே படத்தைத் தடுத்து நிறுத்தும் என போராட்டக்காரர்கள் நம்பிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல், ஆளுங்கட்சியின் சேனலே படத்தை வாங்கியிருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ -டியூன்ஸில் முதலிடம் பிடித்தது. அதைப்போலவே கத்தி இசையும் முதலிடம் பிடித்துள்ளது. ‘3’ திரைப்படம் மூலம் அறிமுகமான அனிருத், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வை திஸ் கொலவெறி’ பாடல் யூடியூபில் ஹிட் ஆனதால், உலகளவில் பிரபலமானார்.
தொடர்ந்து எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி அகிய திரைப்படங்களில் அனிருத் இசை ஹிட் ஆனது.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பாடல்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் லீக் ஆனது. அந்தப் பாடல் ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.
நேற்று கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பாடல்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள உலகளவில் பலர் பயன்படுத்தும் ஐ – டியூன்ஸ் இணையதளத்தில், கத்தி பாடல்கள் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தன.
இதற்கு முன் அனிருத் இசையமைத்த 5 திரைப்பட பாடல்களுமே ஐ – டியூன்ஸ் தளத்தில், வெளியான அன்று முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
ரசிகர்களுக்கும், கத்தி வாய்ப்பிற்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் வெளியான ஏ.ஆர் ரகுமானின் ‘ஐ’ படப் பாடல்கள், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி படத்தின் பாடல்கள் சூப்பர்… பின்னி எடுத்துவிட்டார் அனிருத் என்று நடிகர் சிம்பு பாராட்டு தெரிவித்துள்ளார். அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்ற வகையில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத்.
பாடல்களைக் கேட்டுவிட்டு அனிருத்தை வெகுவாகப் பாராட்டிய சிம்பு, தன்னுடைய பாராட்டு வெளி உலகத்துக்கும் தெரியட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதை ட்வீட் பண்ணி இருக்கிறார்.
கத்தி பாடல்கள் குறித்து, கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும் அனிருத் பின்னியிருக்கிறார் என்றும் கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார் சிம்பு.
மற்றொரு ட்வீட்டில் அனிருத்… உன்ன நினைச்சா சந்தோஷமா இருக்குடா… எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு… குறிப்பா செஃல்பி புள்ள… சூப்பர்!. வாழ்த்துகள்! என்றும் கூறியிருக்கிறார்.
அனிருத்தை மட்டுமல்ல, கத்தி படத்தின் நாயகனான விஜய்யை குறிப்பிட்டு, தலைவா விஜய்… தல ஃபேன் தான் நான். ஆனால் தலைக்கனம் இல்லாத ஃபேன்! என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார்.