நான் ஏன் ஹீரோவானேன்? : ஹிப் ஹாப் தமிழா ஆதி விளக்கம்

ஆரம்பத்தில் இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, அதன்பிறகு அனிருத்துடன் இணைந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடினார். இருவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெறவே, சுந்தர்.சி தான் இயக்கிய ‘ஆம்பள’ படத்தில் ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

aadhi

அதைத்தொடர்ந்து இவர் இசையமைத்த ‘அரண்மனை-2’ ‘தனி ஒருவன்’ படங்களின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகவே தொடர்ந்து இவருக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தற்போது ‘மிசைய முறுக்கு’ என்ற படத்தை இவர் இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார்.

இப்படத்தில் இசை, இயக்கம், நடிப்பு என பன்முகம் காட்டியுள்ள ஆதி, தான் எப்படி இயக்குனர், நடிகர் ஆனேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, நான் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டேன். அதில் என்னுடைய நடிப்பை பார்த்து சுந்தர்.சி. என்னை பாராட்டினார். பின்னர், நான் எழுதிய கதை ஒன்றை அவரிடம் காட்டினேன். அவர் அந்த கதையை படித்துப்பார்த்து தயாரிக்க முன்வந்தார்.

அது என்னுடைய கதை என்பதால், நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்தேன். அப்போதுதான் என்னைப் பற்றிய நிறைய விஷங்களை அதில் சொல்லமுடியும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இதற்கு சுந்தர்.சியும் உறுதுணையாக இருந்தார் என்று கூறினார்.

இப்படத்தில் பெரும்பாலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். விவேக் இப்படத்தில் ஆதிக்கு அப்பாவாக நடித்துள்ளார். ஆத்மிகா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts