குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில், நான்கு புதிய தடுப்பு மருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.பல ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொல்லும் ரோட்டாவைரஸ் என்ற தொற்றைத் தடுக்கும் மருந்து ஒன்றும் இதில் அடங்குகிறது.
இந்த ரோட்டாவைரஸ் தொற்று, கடுமையான வயிற்றுப்போக்கை உருவாக்கி, நீர்ச்சத்து இழப்பால் குழந்தைகளைக் கொல்கிறது.
நோய்க் கிருமி தொற்றிய , சரியாகக் கழுவப்படாத கைகள் மற்றும் மேற்பரப்புகளால் தொற்றும் இந்த தொற்று ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் இந்த வயிற்றுப்போக்கு காரணமாக ஆண்டுதோறும் 80,000 குழந்தைகள் இறக்கிறார்கள்.
இது தவிர, ருபெல்லா, பொலியோ மற்றும் ஜப்பானிய என்கிபேலிட்டிஸ் (மூளைக்காய்ச்சல்) ஆகிய தொற்றுகளைத் தடுக்கும் புதிய தடுப்பு மருந்துகளும் இனி இந்தியாவில் இலவசமாகத் தரப்படும்.
இந்தியாவில் மூளைக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்ட 179 மாவட்டங்களில் இந்தப் புதிய தடுப்பு மருந்து தரப்படும்.
மூளைக்காய்ச்சல் தொற்றும் இந்தியாவில் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொல்கிறது.
இதற்கான அறிவிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்தியா போலியோ நோயை முற்றிலுமாக அகற்றிவிட்டதாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தொற்றிலிருந்து நீண்ட காலப் பாதுகாப்பு தர உதவும் ஊசி மூலமான போலியோ தடுப்பு மருந்தை வழங்கும் என்றும் இந்தியப் பிரதமர் மோடி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் இலவசமாகத் தரப்படும் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 13ஆக உயர்கிறது.