நான்கு இறக்கைகளைக் கொண்டு பறந்திருந்த புராதனப் பறவை ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பின்னங்கால்களிலும் வாலிலும் நிறைய இறகுககளைக் கொண்டுள்ள இப்பறவைகளின் புதைபடிவங்கள் சீனாவில் லியவோனிங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
145 மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்து 66 மில்லியன் ஆண்டுகள் முன்பு வரையான கிரெடேஷியஸ் யுகத்தில் இந்தப் பறவைகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சங்யுரப்டொர் யாங்கி என்று இந்த வேட்டையாடும் பறவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பறவை என்பதை விட இதனை பறக்கும் டைனொசொர் என்றுதான் சொல்ல வேண்டும், ஏனென்றால் சிறகடித்து உயரப் பறப்பது என்பதை விட மரங்களின் உச்சியிலிருந்து சிறகு விரித்து மிதந்து கீழிறங்கும் விதமான ஜந்துக்கள் இவை.
ஊர்வனவற்றுக்கு சிறகுகள் முளைத்து அவை மிதக்கத் தொடங்கின பின்னர் அவை பரிணாம வளர்ச்சி கண்டுதான் பறவைகள் வந்தன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அலகின் நுனியிலிருந்து வாலின் நுனி வரையில் 132 செண்டி மீட்டர் நீளத்தை இந்த புதைபடிவம் கொண்டுள்ளது. அதில் வால் மட்டுமே 30 செண்டி மீட்டர் நீளமாம்.
நான்கு சிறகுகள் கொண்ட பறக்கும் டைனசோர்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரியது இதுதான்.
தற்காலப் பறவைகளில் கழுகைவிட நாரைகளை விட பெரிய உயிரினம் இது.
சீனாவின் போஹாய் பல்கலைக்கழக ஆய்வாளர்களும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் இயற்கை வரலாற்று four அருங்காட்சியக நிபுணர்களும் இணைந்து இந்த புதைபடிவத்தை ஆராய்ந்துள்ளனர்.