நான்கு அமைச்சர்களையும் நீக்கினால் எல்லோரையும் கலைத்துவிடுவோம் -முதல்வருக்கு மாவை எச்சரிக்கை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார்

 

மேலதிகமாக தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களின் நிலைப்பாட்டினையும் தனித்தனியே கேட்டறிந்திருக்கின்றார். இதன்படி பெரும்பாலும் 4 அமைச்சர்களையும் மாற்றி தன்னை இப்பிரச்சனையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் நிலைப்பாட்டினை எடுத்துகொண்டிருந்தவேளை இன்று இரவு தமிழரசுக்கட்சிக்கூட்டம் கட்சியின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது .அதில் தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

கூட்டத்தில் நாளை அமைச்சர்கள் விவகாரம் பற்றி எதுவும் கலந்துரையாடுவதில்லை என்றும் விவாதங்கள் எதுவும் செய்வதில்லை என்றும் முடிவை முதல்வரிடம் விட்டுவிடுவது என்றும் முடிவு எட்டப்பட்டிருக்கின்றது. அதனால் நாளைய அமர்வு வெறுமனே தன்னிலை விளக்கங்களோடு முடிவடைய உள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை தமிழரசுக்கட்சியின் முடிவுகளோடு ஒத்துப்போகாத நிலைவரின் முதல்வருக்கு எதிராக செயற்படுவது  குறித்தும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் காய்நகர்த்தி வருவதாகவும் அறிய முடிகின்றது

அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களை நீக்கச்செய்வதற்காக அவர் பற்றி ஒரு தவறான தகவலை ஏற்கனவே கோபத்தில் உள்ள முதல்வரிடம் எட்டச்செய்வதற்கான பணிகளும் அதனை எதிர்ப்தற்கான பணிகளும் ஒரே தருணத்தில் சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அதன்மூலம் முதல்வரை குழப்பும் முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றது. அதன்படி சத்தியலிங்கம் அவர்கள் சனாதிபதியிடம் முதல்வருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார் என்ற தகவல் வெளிடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் முதல்வரையும் அவைத்தலைவரையும் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றின் மூலம் பதவியிறக்கி மாற்றங்கள் ஏற்படுத்தவும் வேறு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதல்வர் முழு அமைச்சரவையினையும் கலைத்து விட்டு ஒவ்வொரு கட்சிக்கும் அமைச்சுப்பதவிகளை பகிர்ந்து கொடுக்க உள்ளதாக கூட செய்தி கிடைத்துள்ளது. அறிக்கை தொடர்பில் ஏனைய கட்சிகள் திருப்தியற்ற நிலையிலேயே உள்ளன. ஆயினும் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தங்களுக்கு அமைச்சுப்பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் மாற்றத்தினை ஆதரிக்கின்றன.  இந்நிலையில் மற்றக்கட்சிகளுடன் பேச்சு நடாத்திய முதல்வர் தமிழரசுக்கட்சியுடன் பேசாதமை ஏன் என்ற கேள்வி சம்பந்தருக்கு தெரியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தர் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு தொலைபேசியில் அழைத்து இதுபற்றி வினாவியிருக்கின்றார். அதன்பின் விக்கினேஸ்வரன் மாவையுடன் தொடர்புகொண்டு பேசிய வேளை அறிக்கையின் படி 2 அமைச்சர்களை வேண்டுமாயின் நீக்குங்கள் ஆனால் 4 அமைச்சர்களையும் மாற்றுவீர்களாக இருந்தால் உங்களை கூண்டோடு கலைப்பதற்கான வேலைகளை முன்னெடுக்கவேண்டிவரும் என உறுதிபடதெரிவித்திருக்கிறார் என முதலமைச்சர் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

ஏற்கனவே முதலமைச்சரின் செயலாளர் நியமனம் இழுபறிகாரணமாக முதலமைச்சர் மிகுந்த தலையிடியில் உள்ள நிலையில் இந்த விசாரணை அறிக்கை தலையிடியும் சேர்ந்து மிகப்பெரிய தலையிடியாக முதலமைச்சர் முன் உள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே அமைச்சர்களிடம் இருந்து தன்னிலை விளக்கங்களை பெற்றுள்ள முதலமைச்சர் நாளை என்ன செய்வார்? மாகாணசபை குழப்பகரமானதாக அமையுமா? நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவும் கொண்டுவரப்படுமா ? நாளை அமர்வுக்கு முன்னாக நடைபெற உள்ள அவைவத்தலைவருடனான முன்னாயத்த கூட்டத்தில் இருந்துதான் தெரியவரும்.

இதேவேளை முதல்வரின் வீட்டில் மாகாணசபை உறுப்பினர்  சிவாஜி இரவு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நாளைய அமர்வில் முதல்வருக்கு எதிராக ஏதேனும் திட்டங்கள் வகுக்கப்படின் அதனை சிவாஜி மூலம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் அவருடன் கலந்துரையாடியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

முதலமைச்சர் முன் 3 தெரிவுகள் உள்ளன.

1. இந்த  அறிக்கையினை கணக்கில் எடுக்காது  தற்போதுள்ள நிலையிலேயே எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்தல். வேண்டுமாயின் மேலதிக விசாரணைகளை வேறு ஒரு குழு ஒன்றினை நியமித்து மேற்கொள்ளல்

2. அறிக்கையினை ஏற்று 2 அமைச்சர்களையும் நீக்குதல்

3. அறிக்கையினை கணக்கில் எடுக்காமல் உறுப்பினர்களின் விருப்புக்கமைய 4 அமைச்சர்களையும் மாற்றுதல்

எதை தெரிவு செய்வார் அவர் முதலமைச்சராக நீடிக்க முடியுமா? நாளை ஓரளவு தெரிய வரலாம்

 

 

 

 

Related Posts