நானும், ரஜினியும் நடிக்காததற்கு இதுதான் காரணம்- கமல்!

தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையில் பன்முகம் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள், பன்னாட்டு விருதுகள் என அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் அளிக்கப்படும் விருது பாரீஸில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

விருதை பெற்றுக்கொண்ட கமல், அங்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது…

இந்த விருதை பெற நான் தகுதியுள்ளவனா என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விருது எனக்கும் கிடைத்தது மகிழ்ச்சியாகவும், வியப்பாக இருக்கிறது. என்னுடைய படங்களில் பிரெஞ்சு சினிமாவின் தாக்கம் அதிகம் இருக்கும். இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை, மற்றவர்களுக்கு விருது கிடைத்தது வாழ்த்துக்கள். மணிரத்னத்துடன் எப்போது மீண்டும் இணைய போகிறேன் என்று தெரியவில்லை, அவருக்கு நல்ல நடிகர்களும், நல்ல கதைகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. நானும், அவரும் டைரக்ஷனில் பிஸியாக இருக்கிறோம். காலம் வரும்போது கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைவோம்.

நானும் ரஜினியும் இணைந்து நடிக்க சம்மதம் சொல்லி எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் பிறகு படம் எடுக்க பணம் இருக்காது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் சேர்ந்து நடிக்க முடியவில்லை, நாங்கள் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கியதே இந்த காரணத்திற்காகத்தான் என்றவர், மருதநாயகம் படம் பற்றி பேசும்போது, பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அமெரிக்காவில் கூட நிறைய பேர் கேட்க தொடங்கிவிட்டார்கள். இத்தனை காலம் பொறுமையாக இருந்துவிட்டேன், இன்னும் சிறிது காலம் நான் பொறுமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல.

என்னுடைய அடுத்தப்படம் த்ரில்லர் ப்ளஸ் காமெடி படமாக இருக்கும். இது நான் என் மகள் ஸ்ருதியுடன் நடிக்கும் முதல்படமாகும் என்று கூறியுள்ளார்.

Related Posts