யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய நாள் முதல் தன்னை சிலர் பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் கமரூனின் கவனத்தை ஈர்க்க முயற்சித்த காணாமல் போனவர்களின் உறவினர்களின் பல குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருவதுடன் படையினரால் மிரட்டப்பட்டும் வருகின்றனர்.
நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இதுவரை எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அவல நிலை குறித்து அவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இதில் காணாமல் போனவர்களின் 150 குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ் நூலகத்திற்கு எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உறவினர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். என்பதுவும் குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய செய்தி
யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல்