நாட்டை பூட்டவேண்டும்- பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை; முடக்க விரும்பவில்லை – ராணுவத் தளபதி

புதிய கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தொழில்நுட்ப மதிப்பீடு செய்யப்படும் வரை நாடு பூட்டப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கத்தின் கீழ் வைக்கப்படும் என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும், இப்போதைக்கு, நாங்கள் ஒரு முடக்கத்துக்குச் செல்ல விரும்பவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, நேற்று மாலை தெரிவித்தார்.

நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் கோரோனா தொற்றுநோய் கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டனில் காணப்படும் கோரோனா வைரஸின் புதிய திரிபு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறப்படுவதால், நாடு கடுமையான ஆபத்தில் உள்ளது என்றும் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, பகுப்பாய்வு இல்லாமல் நாட்டை மூடுவதற்கான முடிவை எடுக்க முடியாது என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், மருத்துவர் அமல் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.

“தற்போதைய சூழ்நிலையில் நாடு பூட்டப்படவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் நிபுணர்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

நாட்டில் கோரோனா வைரஸின் புதிய திரிபு பரப்புவது குறித்து உன்னிப்பாக கவனித்து வருகின்றோம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts