நாட்டை பிளவுபடுத்த இடமளிக்கப் போவதில்லை; மாத்தறையில் இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எத்ர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் அழைப்பில் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் மாத்தறை சமாதி பிரஜா சங்வர்தன பதனமவின் வருடாந்த புதிய மாணவர்களை இணைத்துகொள்ளும் வைபவத்தில் கலந்துகொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய எதிர்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் விவசாயம், கைத்தொழில் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாகத்தின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ஸ்ரீலங்காவை சிங்கபூர் போன்ற நாடாக மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே தேசத்தை கட்டியெழுப்புவோம் எனக் குறிப்பிட்ட இரா. சம்பந்தன், ஒரே நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் சகல மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்வதுமே தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

முதற்தடவையாக தமிழ் எதிர்கட்சி தலைவர் ஒருவர் தெற்கிற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற சமாதி பிரஜா சங்வர்தன பதனமவின் பயிற்சிக்கு 19 ஆவது மாணவ குழுவை இணைத்துக்கொள்ளும் வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts