பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அமீர்கானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. யாரும் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதை தடுக்கக் கூடாது என்று பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சில தலைவர்களும் அமீர்கான் தான் விரும்பும் எந்த நாட்டுக்கும் போகலாம் என்று தெரிவித்தார். பல சமூக ஊடகங்களில் அவர் தேச விரோத சக்தி என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளார். சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்தது, விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலில் நானோ, எனது மனைவியோ இந்த நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. அந்த எண்ணமும் எங்களிடம் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல் நாங்கள் ஒருபோதும் செய்ததில்லை. எதிர்காலத்திலும் அப்படி செய்யும் எண்ணம் கிடையாது. எனக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் நான் என்ன சொன்னேன் என்பதை கவனிக்கவில்லை அல்லது அவர்கள் திட்டமிட்டே அதை திசை திருப்புகின்றனர். இந்தியா எனது நாடு, அதை நேசிக்கிறேன்.
இந்த நாட்டில் பிறந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அதனால்தான் இன்று இந்த இடத்தில் நான் இருக்கிறேன். சகிப்பின்மை குறித்து முன்பு என்ன கருத்தை நான் தெரிவித்தேனோ, அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். என்னை தேச விரோத சக்தி என்று சிலர் அழைக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லுவேன், நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக யாருடைய அனுமதியோ, ஒப்புதலோ எனக்குத் தேவையில்லை. என் மனதில் இருந்ததை தெரிவித்ததற்காக என்னை ஆபாசமாக பேசுகின்றனர்.
இது நான் சொன்ன கருத்தை உறுதிப்படுத்துவதுபோல் இருப்பது வேதனை தருகிறது. இப்பிரச்சினையில் எனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நாம் சார்ந்து நிற்கும் இந்த அழகிய, தனித்துவம் மிகுந்த நாட்டை பாதுகாக்கவேண்டும். அதன் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, பல்வேறு மொழிகள், கலாசாரம், அன்பு, உணர்வுகள், நுட்பத்திறன், மனக்கிளர்ச்சி ஆகியவற்றையும் நாம் பேணவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தனது அறிக்கையில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘எங்கே மனதில் பயமில்லையோ…’ என்ற கவிதையை அமீர்கான் முழுமையாக மேற்கோள் காட்டி இருக்கிறார்.