நாட்டைத் துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று நாட்டிற்குத் தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும். இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றேன்.
ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ ஒன்றுபடவில்லை. தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை. இதனாலே கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடிகள் அதிகரித்திருந்தன.
ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எனது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.