நாட்டைக் காட்டிக் கொடுக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைடப்பு! – பிரதமர் ஜயரட்ண

இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் செல்வதுடன் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றது. வறுமையின் பிடியில் எவரும் இருக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இந்நிலையில், எமது நாட்டுக்குத் துரோகம் இழைத்து நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது.” – இவ்வாறு பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

dm-jeyaradna

கம்பளை பிரதேச சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கும் வைபவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கம்பளை ஜாதிக உரிமைகள் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் டி.எம். ஜயரட்ன கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் சண்டை சச்சரவின்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஷமிகள் சிலர் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு உதாரணங்களாக பேருவளை, அளுத்கம, தர்ஹாநகர் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 30 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த இந்த நாடு, இனிமேலும் இரத்தம் தோய்ந்த நிலைக்குச் செல்லக்கூடாது.

ஆனால், தமிழ்த் தேயக் கூட்டமைப்பின் ஒவ்வொருகட்ட நடவடிக்கைகளையும் பார்க்கும்போது மீண்டும் ஓர் இனமோதலுக்கு தூபம் இடுவதுபோல அமைகின்றது.

எமது நாட்டுக்குத் துரோகம் இழைத்து, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. எனவே, இத்தகைய நடவடிக்கையைக் கூட்டமைப்பு உடனே கைவிடவேண்டும்” – என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பஸில் ராஜபக்‌ஷ, மஹிந்த சமரசிங்க, பிரதியமைச்சர் ஏர்ள் குணசேகர மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் அனுராத ஜயரட்ன ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts