நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச வைத்திய பரிசோதனை

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச வைத்திய பரிசோதனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும், அதை கட்டாயமாக்குவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரோல், பீ.எம்.ஐ சோதனைகள் போன்றவற்றிற்காக வைத்தியசாலைகளில் நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், பின்னர் அவற்றை கிராமிய வைத்தியசாலைகள் வரை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்தடுடன் அடுத்த கட்டத்தில் மேலும் பல சுகாதார பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும், இதற்காக பாரிய அளவான நிதி செலவிட வேண்டி இருந்த போதிலும் இதனூடாக நீண்ட கால அடிப்படையில் தொற்றா நோய்களின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கு முடியும் என்றும் அமைச்சர் கூறுகின்றார்.

அதன்படி 2018ம் ஆண்டளவில் இந்த பரிசோதனைகளை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதனூடாக 2020ம் ஆண்டாகும் போது 10 வீதமான தொற்றா நோய்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் 2030ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு தொற்றா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதே எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (09) இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் 69வது கிழக்காசிய பிராந்தியத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts