மக்களுக்கும் நாட்டுக்கும் நல்வாசி வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புனித பூமியில் நேற்று (25) இரவு இடம்பெற்றது.
கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் கதிர்காமம் ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் ருகுனு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கருமான சங்கைக்குரிய கொபவக தம்மின் தேரர் அவர்களை சந்தித்து நல்லாசிகளை பெற்றுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த தேரர் அவர்கள் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்தார்.
ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில் தேரர் அவர்களினால் நினைவுச் சின்னமொன்றும் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
கதிர்காமம் ஸ்ரீ அபிநவாராமைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் விகாராதிபதி ருகுனு மாகம்பத்துவே தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய கபுகம சரணதிஸ்ஸ தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி கதிர்காமம் மகா தேவாலயம் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களுக்கும் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டார்.
வரலாற்று முக்கியத்துவமிக்க ருகுனு மகா கதிர்காமம் தேவாலயத்தில் இடம்பெற்ற முழு இரவு பிரித் பாராயண சமய உரையையும் ஜனாதிபதி அவர்கள் செவிமடுத்தார்.
அயோமா ராஜபக்ஷ அம்மையார், ருகுனு மகா கதிர்காமம் தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக நிலமே ஷசீந்திர ராஜபக்ஷ, தற்போதைய பதில் பஸ்நாயக நிலமே தில்ஷான் ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.04.26