இன்புளுவன்சா AH1N1 காய்ச்சலுக்கு சமாந்தமரமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார இதனைக் கூறினார்.
இந்த வகை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாக தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் காணப்படும் என்று அவர் கூறினார்.
எனினும் இது மரணத்தை ஏற்படுத்தும் நோய் அல்ல என்று கூறிய அவர், ஏற்கனவே வேறு நோய்கள் இருப்போருக்கு இது பரவினால் மாத்திரம் மிகவும் ஆபத்தான நிலை ஏற்படலாம் என்று கூறினார்.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதான நபர்கள் மற்றும் நோய்த்தடுப்பு சக்தி குறைவானவர்கள் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய நிலமையில் இதற்கான மருத்துவ வசதிகள் அநேகமான வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், வீணான பயத்தையும் பீதியையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் நிகழ்கின்ற வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களின் படி இந்த வைரஸ் பரவுவதில் மாற்றங்கள் எற்படலாம் என்றும் அவர் கூறினார்.
இது தவிர நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலமையை நிர்வகிப்பதற்காக தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.