நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : யாழில் மங்கள

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை நாட்டின் ஜனநாயகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காங்கேசன்துறையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் மூன்று பிரதான மகுடங்களை மையப்படுத்தியே ஆட்சிக்கு வந்தது. அதாவது ஜனாநாயகம்,நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியனவே இந்த மூன்று மகுடங்களாகும். அதில் ஜனாநாயகம் எனும் மகுடம் சிறந்த முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தமை இதற்கு சிறந்த உதாரணம்.மேலும் உண்மையை கண்டறியும் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் நிதியமைச்சருடன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுலா நந்தப்பேரா, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதி, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts