நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹு வெயிடம் தெரிவித்தார்.
“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்து. அண்மையில் நாம் கோவிட் – 19 இடருக்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள்.
கோரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்தார்.
நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சீன பதில் தூதுவர் சந்தித்தார். இதன்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கோரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் மத்திய அரசு ஒத்துழைப்பும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் சீன பதில் தூதுவர் தெரிவித்தார்.
இறப்பர் – அரிசி உடன்படிக்கை காலம் முதல் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரான பொருளாதார அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் சீனாவிடமிருந்து குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
கோவிட் 19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்திற்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்நியச் செலாவணி வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பது முக்கிய பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.
உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆடைக் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. பொருளாதார வீழ்ச்சியை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு இன்னும் காலம் செல்லலாம். இலங்கை உற்பத்தி பொருளாதாரத்தின் அடிப்படையிலான புதிய அபிவிருத்தி மாதிரியொன்றை பின்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை வெற்றிகொள்வதற்கு நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
‘எமது ஒரே எதிர்பார்ப்பு கடன் அல்லது நிதி உதவியை பெற்றுக்கொள்வதன்று, உற்பத்தியை அதிகரிப்பதற்கு பங்களிக்கும் வகையில் முதலீடுகளை கொண்டுவருவது முக்கிய இலக்காகும். விவசாய உற்பத்திகள் மற்றும் நிர்மாணத் துறை போன்ற பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கான அநேக வாய்ப்புகள் உள்ளன. அதிலிருந்து பயன்பெறுமாறு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அ குறிப்பிட்டார்.
கொவிட் 19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலமைகள் குறித்து சீனாவின் பதில் தூதுவர் வினவியதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மொத்தமாக நோக்கும் போது நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஓரிரு நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி, அந்த நிலமைகளை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
‘ஜனாதிபதி அவர்களே நாம் உங்களுடன் இருக்கின்றோம்’ என பதில் சீன தூதுவர் இந்த சுமுகமான கலந்துரையாடலின் இறுதியில் தெரிவித்தார்- என்றுள்ளது.