நாட்டில் கொவிட் தொற்றாளர், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!!

நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமானளவு குறைவடைந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டமையே இதற்கான காரணமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 350 – 400 ஆகக் குறைவடைந்துள்ளது. அதே போன்று மரணங்களின் எண்ணிக்கையும் 10 ஐ விடக் குறைவாகவே பதிவாகிறது.

கொவிட் தொற்றாளர்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 14 000 சிகிச்சை படுக்கைகளில் 28 சதவீதம் மாத்திரமே பாவனையிலுள்ளன. ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை 41 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும் கடந்த வாரம் இது 30 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது வரையில் 96 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 81 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

53 சதவீதமானோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பெருமளவானோர் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டமை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியமையே தற்போது கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கான காரணமாகும்.

எவ்வாறிருப்பினும் இதே நிலைமை தொடரும் என்று கூற முடியாது. எனவே அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Related Posts