நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் நிலைமை தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது. சமூகத்தில் அறிகுறிகளின்றி பெருமளவான தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். நாட்டில் அடுத்த கொவிட் அலை உருவாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
எனவே தற்போது சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைபிடிக்காவிட்டால் பாரதூரமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில் ,
சமூகத்தில் எவ்வித அறிகுறிகளுமற்ற பெருமளவான தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். எனவே சமூகத்தில் கொத்தணிகளாக கொவிட் பரவல் காணப்படுகிறதா அல்லது சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை தொழிநுட்பரீதியான தகவல்கள் இன்றி தெளிவாகக் குறிப்பிட முடியாது. ஆனால் தொற்று சமூகத்தில் பரவியுள்ளது என்பதை ஏற்று , அதற்கமைய செயற்பட வேண்டியுள்ளது என்றார்.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கையில் ,
அன்றாடம் வெளியிடப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உண்மை நிலைவரம் அல்ல. அதனை விட அதிக தொற்றாளர்கள் கீழ் மட்டத்தில் இனங்காணப்படுகின்றனர். குறிப்பாக பாடசாலைகளுக்குள் மிகவும் வேகமாக கொவிட் தொற்று பரவுகின்றது.
இந்நிலையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளும் குறைவடைந்துள்ளன. அன்டிஜன் உபகரணங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
தேவைக்கு ஏற்றளவு அன்டிஜன் உபகரணங்கள் இல்லை. நாட்டில் பாரியளவில் கொவிட் வைரஸ் பரவியுள்ளது. அடுத்த கொவிட் அலை உருவாகியுள்ளது.
எனவே சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை என்றால் பாரதூரமான பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.