Ad Widget

நாட்டின் முன்னேற்றத்திற்கு நோர்வே அரசாங்கம் தொழில்நுட்ப உதவி

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

norway

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த நோர்வே பிரதமர் சோல்பேர்க்கினை ஜனாதிபதி வரவேற்றதுடன், இரு தலைவர்களுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.

இலங்கைக்கும் நோர்வே அரசாங்கத்திற்குமிடையே இருந்து வரும் வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பாக நினைவுகூர்ந்த தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையேயான இத்தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதோடு, இரு நாடுகளுக்கிடையேயும் புதிய உறவுகளை கட்டியெழுப்புவதற்கு இச்சந்திப்பு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் தெரிவித்தனர்.

தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி தெரிவித்த நோர்வே நாட்டின் பிரதமர், இலங்கையின் இயற்கை எழில் மற்றும் உபசரிப்பு தொடர்பிலும் மகிழ்ச்சி வெளியிட்டார். நோர்வே நாட்டின் பிரதான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கையை ஆக்குவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருப்பதாகவும் நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதை பார்க்கிலும் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியான ஒத்துழைப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் நோர்வே பிரதமர் குறிப்பிட்டார். இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நோர்வே அரசாங்கம் பல்வேறு புதிய முதலீடுகளை இலங்கையில் ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இன்னும் பல நேரடி வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் எழுத்தறிவு வீதமும் கல்வியறிவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவும் இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என்றும் நோர்வே பிரதமர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் ஏற்றுமதி துறையின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம் பொருளாதார பலத்தை அதிகரித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக இலங்கைக்கு பாரியதொரு உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் நன்னீர், உவர்நீர் மீன் தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் ஆடைத் தொழிற்துறை, இரத்தினக்கல், ஆபரணங்கள், வெட்டு மரம் ஆகிய உற்பத்திகள் உயர்ந்த தரத்துடன் உள்ளதாகவும் இதற்கு அதிக சந்தை வாய்ப்புகளை பெற்றுத்தருமாறும் ஜனாதிபதி நோர்வே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். தற்போது இலங்கை அமைதியும் சுதந்திரமும் மிகுந்த ஒரு நாடு என்ற வகையில் அபிவிருத்தியை நோக்கி பயணித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மீண்டும் எமது நாட்டுக்கு விஜயம் செய்து அப்பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு நோர்வேயில் வதியும் இலங்கையர்களிடம் தாம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் பங்குபற்றினர்.

Related Posts