புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
அதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
புதிய அரசியலமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தமது ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அனைவரது யோசனைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்ல தயாராகவே இருக்கின்றோம்.
அனைத்து கட்சி தலைவர்களுடனும் இது தொடர்பில் வெவ்வேறாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
21ம் நூற்றாண்டிற்கு பொருந்தக் கூடியவாறான ஒரு அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்.
இதன் போது அனைத்து தரப்பினரது கருத்துக்களும் யோசனைகளும் உள்வாங்கப்படும் என்றும் கூறினார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட இருப்பதாக சிலர் பொய்யான பிரச்சாரங்களை பரப்புகின்றனர்.
புதிய அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை இனி தான் மக்கள் கருத்துக்கள் ஊடாக தீர்மானிக்க வேண்டும்.
அதில் என்ன விடயங்கள் உள்ளடங்கப் போகின்றன என்று எமக்கே தெரியாது.
இந்நிலையில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கும் எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றார்கள்.
தான் ஒரு பௌத்தன். அதேபோல் இலங்கையர். இந்த நாட்டை ஒன்றுபடுத்தக் கூடிய தேவை எனக்கிருக்கின்றது. நாட்டை ஒருமைப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பே ஜனாதிபதிக்கும் எனக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
மூடிய அறை ஒன்றிற்குள் கொண்டு அரசியலமைப்பை உருவாக்கும் தேவை எனக்கில்லை.
தொலைநகல், ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவுள்ளது.
உலகில் முதல் தடவையாக இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அரசியலமைப்பை உருவாக்கும் நாடாக இலங்கை அமையப் போகின்றது என்றார்.