ஒரு நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தான் அந்தநாட்டில் இருக்கும் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்வார்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் 2013 ற்கான மாவட்ட விருது வழங்கல் விழா யாழ் திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உலக சரித்திரத்திலே புதிய நாடுகள் உருவாக்கம் பெறும் பொழுது, அந்த நாடுகளின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும், உழைத்தவர்களிலே பெரும்பாலானவர்கள் தங்களுடைய இளம் இரத்தத்தை, இளம் துடிப்பை அந்த வீரத்தை தங்களுடைய இளமை நாட்களிலே தமது நாட்டுக்காக அர்பணித்தவர்களே.
அவ்வாறானவர்கள் தான் எமது வடபுலத்திலும் தங்களுடைய வீரத்தை எங்களுக்கு காண்பித்திருக்கிறார்கள்.
அண்மைக் காலங்களிலே எமது பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமது இளம் மூச்சை நிலைநாட்டி, இறுதியிலே மூச்சை விட்டவர்களையும் நாம் இவ்விடத்தில் நினைவுகூற வேண்டும்.எமது நாட்டில் நடைபெறுகின்ற பல துரதிஸ்டவசமான நிகழ்வுகள் கண் முன்னே ஓடுகின்றன.
அதற்கு இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியமுடியாமல் இங்கு போவதா அங்குபோவதா என்று தெரியாமல், யாரிடம் போனால் தஞ்சம் கிடைக்கும் என்று தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடல்கடந்தும் செல்கின்றார்கள்.
தமது எதிர்காலம் என்னவாக மாறும், தமக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா என்று அங்கலாய்க்கின்ற நேரத்திலே பல சோதனைகளுக்குள் இளைஞர்கள் மூழ்கி செல்வதை அறியக்கூடியதாகவுள்ளது.
அதற்கான பின் அடித்தள வேலைகள் மாகாணத்திலே இன்னும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு சுபீட்சமான எதிர்கால வாழ்வை அளிக்கக்கூடிய செயற்திட்டங்களுக்கு நாம் முன்னெடுக்கவேண்டும்.
அந்தத்திட்டங்களை நாங்கள் செய்கின்ற பொழுது, எமக்கு முட்டுக்கட்டையாக பல சோதனைகளை எங்கள் மத்தியிலே போடுகிறார்கள்.
அதாவது, ‘இங்கே வந்தால் நல்ல வேலைவாய்பு இருக்கிறது இங்கே போனால் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும் என்றெல்லாம் இளைஞர்களைத் திசை திருப்புகிறார்கள்.
குறிப்பாக நூற்றுக்கணக்கான யுவதிகளை முன்பள்ளி ஆசிரியர்களாக சேர்த்து இராணுவத்தினருடைய கொடுப்பனவுகளை கைநிறைய வழங்கி அவர்களை திசை திருப்பியுள்ளார்கள்.
அவ்வாறு பணிக்குச் செல்பவர்கள், தாங்கள் என்ன செய்கின்றார்கள்?, யாருக்காகப் பணி செய்கின்றோம்?, எதற்காக பணி செய்கின்றோம்?, எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த யுவதிகளும் சிந்தித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
வடபுலத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கு நாங்கள் ஒரு மகாநாட்டை நடத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக இந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பல பிரகடனங்களை செய்து கொள்ளலாம்.
அதற்கூடாக எங்களுடைய நாட்டிலே நாங்கள் தமிழர்கள் என்பதையும், தமிழர்களுடைய சக்தி எவ்வாறாக இருக்கிறது என்பதையும் இந்த உலகம் பூராகவும் காண்பிக்கலாம்.
ஆகவே, நிச்சயமாக ஒரு மகாநாடு ஒன்றை நடத்துவதற்குரிய சகல அம்சங்களையும் அடங்கிய கருப்பொருளை முன்னெடுத்து அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால், 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளில், யாழ்.மாவட்டம் சார்பாக முதலாம் இடத்தை பெற்ற 13 பேருக்கு விருதுகளும், விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், வடமாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் கழக சம்மேளனங்களிற்கு மடிக்கணிணிகளும் வழங்கப்பட்டன.
தேசிய இளைஞர் சேவை மன்றின் தலைவர் ஜ.தவேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.