விவசாயிகள் கூடுதலான வருமானத்தைக் கருத்திற்கொண்டு, கீரி சம்பா போன்ற நெல் வகைகளை கூடுதலாக உற்பத்தி செய்ததனால் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்து விபரிக்கையிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித பண்டார பிரதிப் பொது முகாமையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்pசயில் கலந்து கொண்ட போது இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நெல்லை அவர்கள் பாரிய அளவிலான நெல் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்தமையும் இந்தப் பிரச்சினைக்கு காரணமாகும். நெல் சந்தைப்படுத்தும் சபை எப்பொழுதும் மொத்த அறுவடையையும் கொள்வனவு செய்வதிலும் பார்க்க நெல்லுக்கு நிரந்தர விலையை முன்னெடுத்து, விவசாயிகளைப் பாதுகாப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
விவசாயத் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைவாக நாட்டில் நெல் கையிருப்பில் பற்றாக்குறை இருக்கவில்லை. அடுத்த மாத நடுப்பகுதி வரையில் போதுமான அரிசி நாட்டில் உண்டு. அடுத்த மாத நடுப்பகுதியில் பெரும்போக அறுவடை இடம்பெறவுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்ததாவது:
1978 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஒருவருடம் அல்லது இரண்டு வருடம் தவிர ஏனைய வருடங்களில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
கட்டுப்பாட்டு விலையை விதித்தமையால், வர்த்தகர்கள் அரிசி விற்பனையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டதனால், இந்த அரிசிப் பிரச்சினை அதிகரித்தது.
சதொச போன்ற நிறுவனங்களின் மூலம் போட்டித் தன்மையை ஏற்படுத்தி, சந்தையில் அரிசியின் விநியோகத்தை அதிகரித்து விலைக்கட்டுப்பாட்டுக்கு வழி வகை செய்வது மிகவும் பொருத்தமானதாக அமையும்.
இதுவரையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேலும், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசிக்கான கேள்வி மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அரிசி கிடைக்கப்பெற்றதுடன் சந்தையில் அரிசி விலை மேலும் வீழ்ச்சியடையும் என்றார்.