நாடு கடத்தப்பட இருக்கும் முன்னாள் போராளி!

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) என்பவரே இன்று (வியாழக்கிழமை) நாடு கடத்தப்பட இருக்கின்றார் என அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறுகின்றது.

இது குறித்து அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கையில், “நான் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கொல்லப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

என்னுடன் இணைந்து போராடிய இரண்டு முன்னாள் போராளிகளுக்கு, விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தமைக்காக அவுஸ்ரேலியா அடைக்கலம் அளித்துள்ளது. நான் விடுதலைப் புலிகளுக்காக சண்டைப்படகுகளை வடிவமைத்தும் உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து தமிழ் அகதிகள் பேரவையின் தலைவர் ஆரன் மயில்வாகனம் கூறுகையில், “தங்கலிங்கம் சாந்தரூபன் ஆபத்தில் இருக்கிறார் என்பதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை” எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இது தொடர்பாகக் கூறுகையில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 19 வயதில் இணைந்த சாந்தரூபன், இனியவன் என்ற பெயரில் இயங்கியவர் என்றும் இவர் புலிகள் இயக்கத்தின் முன்னணி பங்கு வகித்து வந்தவர்.

முன்னாள் போராளியான மனோகரன் தனபாலசிங்கமும், இனியவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் என்றும், அவர் படகுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்” எனத் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று நாடு கடத்தவுள்ளதாக அவுஸ்ரேலிய எல்லைப் படை அறிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

Related Posts