கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ் ஊடக அமையத்தில், நடைபெற்ற ஊடவியிலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் கல்விச் சேவையில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளை எதிர்த்துஆசிரியர் சங்கங்கள் அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை 26 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
அத்தோடு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பாரிய போராட்ட மொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.
ஆகவே அன்றைய தினம் அனைத்து அதிபர் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து சுகயீன விடுமுறையை எடுத்து எதிர்ப்பைக் காட்டுவதுடன் கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.
அதிலும் தேசிய ரீதியாக நடைபெறுகின்ற இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருக்கின்றவர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.