நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் பசில் ராஜபக்ஷ!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இதுவரையில் பங்கெடுத்து வந்த தான், இனி எந்தவொரு அரச நிர்வாக பதிவிகளையும் வகிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அவசியம் ஏற்படின் தொடர்ந்தும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்திற்கு வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா அல்லது கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் ரேணுகா பெரேரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த 2021 ஜூலை 8ஆம் திகதி பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts