நேற்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த கதிரை பொலிஸார்மீது விழுந்ததனால் பொலிஸார் சிலர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் அமர்ந்து மகிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தினை 3வது தடவையாகவும் நிறைவேற்றியபோது மகிந்த தரப்பினர் கடுமையான அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மகிந்த தரப்பினரிடமிருந்து சபாநாயகரைப் பாதுக்காக்க முயன்ற பொலிஸார் மீது கடும்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்கள் மீதும் மிளகாய்த்தூள் கரைத்த நீர்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீதும் மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று எமது நாடாளுமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.