நாடாளுமன்றில் சுமந்திரன் உரையை குழப்பிய முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள்!

சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் நேற்றுச் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.

தனது உரையின் ஆரம்பத்தில் சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் தொடர்பாக தனது கவலையை வெளியிட்ட சுமந்திரன் எம்.பி. ஷரியா சட்டம் தொடர்பிலும் சில கருத்துகளை முன்வைத்தார்.

“நான் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால், அதைப் பின்பற்றுபவர்களை மதிப்பவன். எனது கருத்துகள் இஸ்லாத்துக்கோ அதனைப் பின்பற்றுபவர்களுக்கோ எதிரானதல்ல. நான் நட்புறவுடன் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.

சவூதியில் இலங்கைப் பெண் ஒருவருக்கு கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலமணி நேரத்தில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும். இதேபோன்றதொரு நிலையை 2013ஆம் ஆண்டும் ரிஸானா விடயத்தில் எதிர்கொண்டோம். ரிஸானாவுக்கு தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில நாடுகளில் பழைமைவாத சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. நாம் நாகரிக காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நான் கிறிஸ்தவன். எனது மத வேதாந்தத்திலும் கல்லால் எறிந்து தண்டனை நிறைவேற்றும் முறை உள்ளது. ஒரு தடவை ஒரு பெண்ணை கல்லால் எறிந்து கொல்வதற்காக கொண்டுவருகின்றார்கள். அப்போது இயேசுநாதர், “உங்களில் பாவம் செய்யாதவர்கள் இந்தப் பெண் மீது முதல் கல்லை எறியுங்கள்” என்று கூறுகின்றார். கற்களுடன் வந்தவர்கள் கற்களைப் போட்டுவிட்டு திரும்புகின்றனர்.

இங்கு முன்வரிசையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். இந்த அரசிலும் பல முஸ்லிம்கள் இருக்கின்றனர். உங்களிடம் நட்புறவுடன் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன்” என்று கூறிவிட்டு, ஷரியா சட்டம் என்று தொடங்கியபோது ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட எம்.பியான மரிக்கார் கூச்சலிட்டுக்கொண்டு எழுந்தார்.

அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அமைசசர் ரிஷாத் பதியுதீன், எம்.பிக்களான நவவி, இஷாக் ரஹ்மின் ஆகியோர் மரிக்கார் எழுந்ததைப் பார்த்துவிட்டு தாமும் எழுந்து நின்று கூச்சலிடத் தொடங்கினர்.

இதன்போது எனது மிகுதிப்பேச்சை கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்று சுமந்திரன் எம்.பி. கூறியபோதும் அவர்கள் தொடர்ந்தும் கூச்சலிட்டனர்.

தமது மதச் சட்டத்தை சுமந்திரன் விமர்சிப்பதாக குற்றஞ்சாட்டிய இவர்கள் சுமந்திரனை வசைபாடினர்.

குழப்பம் ஏற்படுத்தாது அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் பல தடவைகள் கூறியபோதும் மரிக்காரும், ரிஷாத் பதியுதீனும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் சபாநாயகரின் அறிவிப்பைப் பொருட்படுத்தாது மரிக்கார் தொடர்ந்தும் கூச்சலிட, “மரிக்கார் உங்களுக்கு 3 தடவைகளுக்கு மேல் அறிவுறுத்திவிட்டேன்” என சபாநாயகர் கடுந்தொனியில் எச்சரித்தார்.

அப்போது சுமந்திரன், “அமைச்சரே! உறுப்பினர்களே! நான் இஸ்லாத்துக்கோ, முஸ்லிம்களுக்கோ எதிராவன் அல்லன். இலங்கை முஸ்லிம்களுக்காகக் குரல்கொடுத்ததற்காக நான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவன்” எனக் கூறியபோதும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுமந்திரனைக் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “சுமந்திரனை பேச அனுமதிக்கவேண்டும். அவர் கூறும் விடயங்களில் தவறில்லை. இருக்குமானால் அவற்றை ஹென்சார்ட்டிலிருந்து நீக்க நீங்கள் (சபாநாயகர்) உத்தரவிடுங்கள்” என்றார்.

“ஆனால், நான் பேசுவதில் தவறுகள் கிடையா. அப்படி ஓர் இனத்தையோ, மதத்தையோ புண்படுத்துபவன் நானல்ல. முதலில் இந்த உறுப்பினர்கள் எனது பேச்சை முழுமையாகக் கேட்கவேண்டும்” என்றார் சுமந்திரன் எம்.பி.

இந்நிலையில், அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா ஆகியோர் சுமந்திரனுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்ததுடன், அவரைத் தொடர்ந்தும் பேச அனுமதிக்குமாறும் கோரினர்.

எனினும், அமைச்சர் ரிஷாத் மற்றும் 3 உறுப்பினர்களும் தொடர்ந்தும் இடையூறுகளை ஏற்படுத்திக்கொண்டு கூச்சலிடவே சபாநாயகர் கரு ஜயசூரிய கடுந்தொனியில் உத்தரவிட்டு அவர்களை அமரவைத்தார்.

இதையடுத்து சுமந்திரன் எம்.பி., தனது உரையைத் தொடர்ந்தார்.

இதன்பின்னர் மரிக்கார், நவவி, இஷாக் ஆகியோர் ஏதோ தீவிரமாக ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்ததுடன், சபைக்குள் அங்குமிங்கும் ஓடித் திரிந்துகொண்டிருந்தனர்.

Related Posts