நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும்படி கோட்டாவிடம் மஹிந்த கோரிக்கை

நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியாது. பெருமளவான அரசமுறை கடன் சுமையை மிகுதி வைத்துவிட்டே அவர்கள் சென்றுள்ளார்கள்.

நாங்கள் அதிக கடன்களைப் பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தினாலும் நாம் பெற்ற கடன்கள் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்களை கட்டியெழுப்பியுள்ளோம்.

தற்போது புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதி, பிரதமரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. கடன்களை மீள்செலுத்துவதற்கு நாம் சட்டமூலமொன்றை கொண்டுவர தயாராகி வருகின்றோம்.

எதிரணி விரும்பினால் அதனை தோற்கடிக்க முடியும். அவ்வாறு தோற்கடிக்கும் பட்சத்தில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பயணம் பாதிப்படையும்.

ஆனாலும் நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்தரப்பினரால் மிக சொற்ப காலத்திற்கே இடையூறு விளைவிக்க முடியும். ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முதலாவது வாய்ப்பு கிடைக்கும்.

அந்த முதல் வாய்ப்பிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts