நாடளாவிய ரீதியில் களைக்கட்டியது தைப்பொங்கல் வியாபாரம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை (சனிக்கிழமை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், வடக்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைக்கட்டியுள்ளது.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை பொங்கலில் ஆர்வம் காட்டி வருவதுடன், மிகுந்த பரபரப்புடன் காலை முதல் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் பொங்கல் வியாபாரம் களை கட்டியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. வவுனியாவின் புறநகர் பகுதியில் இருந்து பல பொதுமக்கள் வவுனியா நகருக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர்.

வடக்கில் மாத்திரமின்றி மலையகத்திலும் பொங்கல் வியாபாரம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீதியோரங்களில் புதிதாக விற்பனை நிலையங்கள் முளைத்துள்ளன. மக்கள் அத்தியசியப் பொருட்கள், பூஜை பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். அங்கு சனநெரிசல் அதிகரித்து காணப்படுவதால் இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் உடப்பு தமிழ்க் கிராமத்தில் காலை முதல் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Related Posts