பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தலைநகர் கொழும்பில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று வடக்கில், கிளிநொச்சியிலும் மக்கள் பெற்றோல் கொள்வனவிற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற நிலையில், மக்கள் முண்டியடித்து எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையகத்தில் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனச் சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தில் நுவரெலியா, ஹற்றன், தலவாக்கலை, நோர்வூட், மஸ்கெலியா போன்ற பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்டவரிசையில் சாரதிகள் காத்திருக்கின்றனர்.
கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு 3 மாத காலமாகியும் அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்காத நிலையில், இப்போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.