நாங்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து வாக்களிப்போம் : யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எமது உறவுகள் கொத்துக் கொத்தாக வயது பால் வேறுபாடின்றி உடல் சிதறி இறந்ததையா? இறந்த உடல்கள் அதே இடத்தில் அழுகியதையா? கைது செய்யப்பட்டுக் காணாமற் போனவர்களையா? போர் முடிந்த பின்பும் முகாம்கள் அமைக்கவென சுவீகரிக்கப்படும் எமது காணிகளையா? திட்டமிட்டு அரங்கேறும் குடியேற்றங்களையா?

இறந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாதிருக்கும் அவல நிலையையா? சிங்களமும் போற்றும் சீமான் இராமநாதனின் நினைவு தினத்தைக் கூடக் கொண்டாட உரிமையற்றிருக்கும் நிலமையா?

கைதாகிச் சிறையில் வாடும் எம் தமிழ் உறவுகளையா? கணவனை இழந்து தவிக்கும் மனைவியையா? மனைவியை இழந்து தவிக்கும் கணவனையா? தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளையா? எமக்காக ஈகம் தந்த எம் சகோதர சகோதரிகளையா? அல்லது சூறையாடப்படும் எமது பொருளாதாரத்தையா?

போராடியதால் அங்கமிழந்து ஆதரவற்று நிற்கும் எம் சகோதர சகோதரிகளையா? பால் வடியும் முகத்துடன் விசுக்கோத்து உண்டபின் பாதகர்களால் பலியெடுக்கபட்ட பால் போன்ற சந்திரனையா?

எமக்காக யாரும் தீர்மானம் எடுக்க வேண்டுமா? நாங்கள் ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திப்போம். எமக்கொரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதனை அனைவரும் பயன்படுத்துவோம். எங்கள் தள்ளாத வயதுத் தாத்தா பாட்டி முதல் வாக்குரிமை உள்ள அனைவரும் ஒருவர் கூட விடாமல் வாக்களிப்போம்.

நாம் வாக்களிக்காவிட்டால் எமது வாக்குச் சீட்டுக்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, இன்றே எமது பகுதி தபற்காரரிடம் கேட்டு எமது வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வோம். அவரிடம் பெறமுடியாது போனால் தபால்கந்தோரிற்குச் சென்று பெற்றுக் கொள்வோம்.

நாம் தன்மானம் மிக்கவர்கள் என்பதை அனைவரிற்கும் எடுத்துக்காட்டுவோம். அற்பசொற்ப சலுகைகளுக்கு அடிமையாக மாட்டோம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்.அணி அணியாகச் சென்று வாக்களிப்போம்.

வாக்களிப்பது எமது தலையாய கடமை. அதிலும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம். எமது பலத்தைக் காட்டுவோம்.

அடிமரம் வரையும் வெட்டப்பட்டு வேரும் அடிமரமாய் மட்டும் நிற்கும் எம்மினத்தை இதற்குமேலும் அழிந்துவிடாமல் பாதுகாப்போம்.

அதன் பின்பு உரிமைக்காகப் போராடுவோம் என ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts