ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த நவிப்பிள்ளை வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரைச் சந்தித்தார்.
எனினும் அவரது சந்திப்பினையடுத்து பலர் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அது குறித்து விஜயத்தின் இறுதியில் தன்னைச் சந்தித்தவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறையிடப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே இது குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது.
இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய தலைவர் பிரட் அடம்ஸ் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அழைக்கப்பட்ட இராஜதந்திரி சந்தித்தவர்களை அரசாங்க அதிகாரிகளே சித்திரவதை செய்வது வெட்ககேடான செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்த அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.