Ad Widget

நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பேன் – கார்த்தி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில், 15-வது தென் இந்திய அளவிலான கலை விழா, ‘லாரிக்காஸ்-2016‘ என்ற தலைப்பில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார்.

karththy

இணை செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, அறங்காவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை கவிஞர் கவிதாசன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு இடையிலான குழு நடனம், தனிநபர் நடனம், பாட்டுக்கு பாட்டு, முகஅலங்காரம், காய்கறி அலங்காரம், பூ அலங்காரம், கோலப்போட்டி, புகைப்பட போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் தென் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கேள்விக்கு, நடிகர் கார்த்தி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: உங்கள் தந்தை சிவக்குமாரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
பதில்: சுயஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொண்டேன்.

கேள்வி: உங்கள் அண்ணன் சூர்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டது?
பதில்: உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே.

கேள்வி: சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
பதில்: நல்ல கதை அமைந்தால், நிச்சயம் சேர்ந்து நடிப்பேன்.

கேள்வி: எப்போது புதிய படத்தை இயக்குவீர்கள்?
பதில்: படம் இயக்குவது மிகவும் பொறுப்பான பணி. சற்று பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி: சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் நடித்தீர்கள்? அதில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?
பதில்: போலீஸ் கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி நடித்தேன். காவல்துறையை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Posts