நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் – விஷால்

நடிகர் சங்க தேர்தல் பொதுத்தேர்தல் போன்று பரபரப்பாக பேசப்பட்டதற்கு விஷால் அணியினர் களம் இறங்கியதே முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் முடிவுக்குபிறகு, ‘அனைவரும் இனி சமம்’ என்று விஷால் கூறினார். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர்… நடிகர் சங்க பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். என்றாலும், சங்கம் வேறு, நடிப்பு தொழில் வேறு. நடிகர் ராதாரவி சங்க தேர்தலின் போது என்னை கடுமையாக விமர்சனம் செய்தார். இப்போது இருவரும் ஒரே படத்தில் நடிக்கிறோம். அவரது விமர்சனம் சங்க தேர்தல் சம்பந்தப்பட்டது.

நடிப்பு என்று வந்தால் இருவரும் சக கலைஞர்கள். அவரை விட்டுக் கொடுக்க முடியாது. நல்ல கதை அமைந்தால் சரத்குமார் சாருடன் நடிக்கவும் எனக்கு தயக்கம் இல்லை. நடிகர் சங்கத்தின் 2 வருட கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆடிட் நடந்து வருகிறது. அறக்கட்டளை கணக்கு இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. தருவார்கள் என்று நம்புகிறோம்.

வரவு–செலவு கணக்கு முழுவதும் இருந்தால்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். எங்கள் பணிகைள தொடங்க முடியும். கணக்கு முழுவதும் வரவில்லையென்றால் நீதிமன்றம் வழியாக அதை பெறுவதை தவிர வேறு வழியில்லை.

குருதட்சணை திட்டம் மூலம் கணக்கெடுப்பு நிறைவு பெற்றதும், தேவையான நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும். நடிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு பெற்று தரப்படும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நான், ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, கார்த்தி எல்லோரும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடிக்க தயாராக இருக்கிறோம்.

ஒரு நல்ல கதையுடன் இயக்குனரை தேடி வருகிறோம். கதைக்கு ஏற்ப யார்–யார் நடிப்பது என்பதை முடிவு செய்வோம். பெரிய ஹீரோக்கள் தேவை என்றாலும் அணுகுவோம். ஒப்புக்கு என்று இல்லாமல் நல்ல கமர்ஷியல் படமாக எடுப்போம். ஏப்ரல் மாதத்துக்குள் இதற்கான பணி தொடங்கப்படும் என்றார்.

Related Posts