நல்லூர் பிரதேச சபை தனது ஆட்சியின் கீழ் வரும் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் நிலையங்கள் நிறுவனங்களுக்கான வருடாந்த வரியினை இவ்வருடம் அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த காலங்களில் 800 ரூபா அளவில் இருந்த வரிகள் கூட இம்முறை 3500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகரிப்பு வீதமானது மிகவும் அதிகமானதாக காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் மட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வியாபார நடவடிக்கைகள் மிகவும் மந்தமானதாக இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் வியாரபார நடவடிக்கைகளுக்கும் சாதகமான உட்கட்டுமான வசதிகளை வழங்குவதில் அக்கறை காட்டாது வரிகளை கூட்டி வசூலிப்பது எந்தவகையில் நியாயம் எனவும் பிரதேச சபையினால் எந்தவகையான சேவைகள் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பல சிறு வீதிகள் இன்னமும் பராமரிக்கப்படாமலும் திருத்தப்படாமலும் இருக்கின்றன.சுத்திகரிப்பு தொழிற்பாடுகள் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை.
இந்நிலையில் வர்த்தக வரி இவ்வருடம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதானது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை கேள்விக்குள்ளாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆதன வரி தொடர்பில் எந்தவித அதிகரிப்புக்களிலும் கவனம் செலுத்தாமல் வர்த்தகர்களின் மீது கவனத்தினை செலுத்தியிருப்பது கவலைக்குரியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
இவர்களால் வர்த்தகநிலையங்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்படும் வரிவசூலிப்பு கடிதங்களில் ஒருவாரகாலத்திற்குள் செலுத்துமாறும் தவறின் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேசசபையானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆட்சியில் இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.மக்கள் நலன் மற்றும் உரிமை குறித்து தேர்தல் காலத்தில் குரல் கொடுக்கும் இக்கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறான நியாயமற்ற வரிவசூலிப்புக்களுக்கு துணைபோகின்றமையானது வர்த்தகர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.