நல்லூர் பிரதேச சபையால் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் அபிவிருத்தி பணிகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

திருநெல்வேலி சந்தைக் கட்டடத்தின் தரைப் பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் சிறிய இடத்தில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. நாளாந்தம் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற பெருந்தொகையான வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் வியாபாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் சிரமங்களுக்குள்ளாகின்றார்கள்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன் வந்துள்ள பிரதேச சபை செயலாளர், சந்தைக்கு வரும் வாகனங்களை சிரமமின்றி தரிப்பதற்கு வசதியாக சந்தைக்கு முன்பாக ஆடியபாதம் வீதிக்கு கிழக்குப் பக்கமாக, முன்பு வாழைக்குலை வியாபாரம் செய்யப்பட்ட காணியை வாகனங்கள் விடுவதற்கு வசதியாக மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். சுற்றுமதில் உட்பட 06 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேபோல் வாசகர்களின் நலன்கருதி கொக்குவிலிலுள்ள பொதுநூலகமும் 04 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாசகர் வசதியாக நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, குளப்பிட்டியில் சிறு கட்டடத்தில் இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை மக்களின் வசதி கருதி காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பொதுச்சந்தைக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts