யாழ். திருநெல்வேலிப் பகுதியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கலாசாலை வீதியில் பாற்பண்ணைக்கு முன்பக்கத்திலுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 5.5 பரப்புக் காணியினையே இராணுவத்தினர் இவ்வாறு உரிமை கோரியுள்ளனர்.
குறித்த காணியானது நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான போதிலும் அதனை தம்மிடம் வழங்குமாறு ஊரெழு படைமுகாம் இராணுவத்தினர் கேட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் கேட்கும் குறித்த காணியினை எக்காரணம் கொண்டும் வழங்க முடியாதென்று நேற்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியினை 2012-ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஊரெழு படைமுகாம் இராணுவ அதிகாரிகள் உரிமை கோரியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் இராணுவத்தினர்க்கு குறித்த காணியினை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது எனவும் ஆனி மாதம் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கடந்த யூன் மாதம் 7-ம் திகதி அன்று யாழ்.அரச அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தற்போது 3 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் குறித்த காணியினை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.
இராணுவத்தினரின் உச்சக்கட்ட செயற்பாடுகளாக சென்ற வாரம் 6 இராணுவத்தினர் குறித்த காணிக்குச் சென்று அயல் பகுதி வீட்டுக்காரர்களிடம் விசாரித்தும் உள்ளனர்.
இதன்பின்னர் நல்லூர் பிரதேச சபை அவசரமாக நிர்வாக சபைக் கூட்டமொன்றினை நேற்றுக்கூட்டி அதில் குறித்த காணி தொடர்பான பிரேரணை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இதில் தற்போது விளையாட்டு மைதானமாக பாவிக்கப்பட்டு வரும் குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்க முடியாது என்றும் அவ்வாறு வழங்க வேண்டும் என ஒரு கட்டம் ஏற்பட்டால் மக்களினை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் யாழ்.அரச அதிபரிடமும் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் அறிக்கை சமர்ப்பிப்பது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் குறித்த காணியில் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைப்பது என்றும் இதன் முதற் கட்ட வேலையாக குறித்த காணியில் குழாய்க் கிணறு ஒன்றினை அமைத்து பூங்கன்று நாட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இராணுவம் கோருவதற்காக மக்களுடைய சொத்தை எக்காரணம் கொண்டும் யாருக்கும் எதனையும் வழங்க மாட்டோம் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில்கூட கோப்பாயில் 550 பரப்புக் காணியினை இராணுவம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.