நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அதற்கான முன் அனுமதி பெற்று அதனைச் செயற்படுத்த முடியுமென வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணிக்கு நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பாடசாலை விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் அதற்கான முன் அனுமதி பெற்று விடுமுறையை வழங்குவதுடன் அதற்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலையினை நடத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறும் தினம் தமிழ்ப் பண்பாடு கலாசாரங்களை தாங்கி எமது மக்களும் மாணவர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் வீணா கான குருபீட அமைப்பாளர் சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts