நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம்;

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது.

இவ் உற்சவத்தை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உற்வசத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் விசேட கூட்டம் ஒன்று யாழ். மாநகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் மகோற்சவ உபயகாரர்கள், யாழ். மாநகர சபை ஊழியர்கள், வர்த்தகர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆலய தொண்டர் சபை உறுப்பினர்கள், பாடசாலைச் சாரணர்கள், சுகாதார தொண்டர்கள் , வைத்தியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இ.போ.ச. உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆலய உற்சவத்தை முன்னிட்டு வழமையாக போடப்படும் வீதித் தடைகள் இம்முறையும் போடப்படும். இத் தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள்.

கந்தர்மடம், முத்திரைச் சந்தி உட்பட பல இடங்களில் இ.போ.ச. சிறப்பு பஸ் தரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மாநகர சபை ஊழியர்களால் ஆலயச் சூழல் தினமும் சுத்தமாக்கப்பட்டு வருகின்றது.

தாகசாந்தி நிலையங்கள் மற்றும் அடியார்கள் இளைப்பாறுவதற்கான கொட்டகைகள் என்பன அமைக்கப்பட்டு வருவதைக் காண முடிகிறது. மற்றும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், சென். ஜோன்ஸ் படை உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.இதைவிடத் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் தென்னிலங்கையிலிருந்து பெரும் தொகையான மக்கள் உற்சவ தினங்களில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்சவ தினங்களில் கலந்து கொள்ளும் அனைத்து அடியார்களுக்கும் நல்லூர் துர்க்கா மணி மண்டபம்இ நல்லை ஆதீனம், நல்லூர் மூத்த தம்பி மடத்திலும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

உற்சவ தினங்களில் பங்குபற்றும் ஆண்கள் வேஷ்டி அணிந்தும் பெண்கள் சேலைகள் அணிந்தும் பக்தி பூர்வமாக கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இம்முறை உற்சவ தினங்களில் இலட்சக்கணக்கான அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளமையினால் பெண்கள், சிறுவர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளும் படியும் சுமங்கலிப் பெண்கள் தலைக்குப் பூச்சூடி குங்குமம் பொட்டு அணிந்து தமிழ்ப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணும் வகையில் ஆலயத்துக்கு வருமாறும் வேண்டப்படுகின்றனர்.

அத்துடன்இ நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தினரால் குடாநாட்டில் புகழ் பூத்த இசைக் கலைஞர்களின் கர்நாடக சங்கீத கச்சேரிகளும் வளரும் இளம் கலைஞர்களின் சங்கீத கச்சேரிகளும் பக்கவாத்தியமும் நடைபெறவுள்ளன.

இதைவிட நல்லூர் ஆதீன மண்டபத்தில் புகழ் பூத்த சமயப் பெரியார்களின் சமயச் சொற்பொழிவுகளும் கதாப்பிரசங்கங்கள் ஆகியனவும் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கிடைத்த தகவல் ஒன்றின்படி இக்காலத்தில் இலங்கை வருவதற்கு சுவிஸ் நாட்டில் இருந்த மட்டும் 17000 விமானச்சீட்டுக்கள் வாங்கப்பட்டிருக்கின்றனவாம். இம்முறை வெளிநாட்டவர் வருகை அதிகமாக இருக்கும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அதேவேளை வேடமாகாணசபைத்தேர்தல் பிரச்சாரங்களும் இத்திருவிழாவினை ஒட்டி பக்தர்களை மையப்படுத்தி நகரக்கூடிய வாய்ப்புக்கள் தென்படுவதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது

Related Posts