நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருட்டு: ஒருவர் கைது

நல்லூர், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து, மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, நீதிபதியின் மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர், காரின் கண்ணாடியைப் பூட்டவில்லை. இதனால் காரிற்குள் இருந்த நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூசை வழிபாட்டினை நிறைவு செய்து விட்டு வந்த போது காரில் இருந்த கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளதை உணர்ந்த நீதிபதி, உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், நல்லூர் ஆலய வளாகத்தில் நின்ற இளைஞர் ஒருவரை திருடிய சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்த சந்தேகநபரிடம் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts