நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் : தங்க நகைகள் அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார்.

நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லூர் ஆலயத் திருவிழா 25 தினங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருகின்றனர். இதனைக் களவாடிச்செல்வதற்காகவே சிலர் ஆலயத்துக்கு வருகை தருகின்றனர். இதுவரையும் எந்தவித களவுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கபெறவில்லை.

இருந்தும் பக்தர்களை பாதுகாப்பதற்காக 750 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிவில் உடையிலும் பொலிஸ் சீருடையிலும் பொலிஸார் ஆலயத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் ஆலய வெளிச்சூழலில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆலயச்சூழலில் சந்தேகத்துக்கிடமாக யாரும் நாடமாடினால் உங்களுக்கு அருகில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும். அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பார். கடந்த வாரம் புத்தளம் மற்றும் வவுனியா பகுதியில் இருந்து வருகை தந்த திருட்டு கும்பல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் இதே ஆலயத்தில் திருட்டுக்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பொலிஸாரிடம் உள்ளன. அப் புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர்களை இனங்காணும் நடவடிக்கையில் புலனாய்வு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர் என பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் வீட்டின் பாதுகாப்பு தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் உடமைகளை மிகவும் பாதுகாப்பாக பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக வீட்டில் யாரையாவது நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு வருமாறும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Related Posts